அந்தமானில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தீவு ஒன்றிற்கு நேதாஜி பெயர் சூட்டினார்

அந்தமான்-நிக்கோபார் தீவுகள் ஒன்றிற்கு நேதாஜி என பிரதமர் மோடி பெயர் சூட்டியுள்ளார். 2 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்தமான் சென்றார்.

நேற்று இரவு போர்ட் பிளேர் விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று 2004-ம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவாக கார் நிகோபார் தீவில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவிடத்தில் மலர் தூவி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மேலும் அங்கு மெழுகுவர்த்தி எற்றி வைத்து பிராத்தனை செய்தார்.

இதை அடுத்து பழங்குடியின மக்கள் தலைவர்களுடன் பி.ஜே.ஆர். திடலில் மோடி கலந்துரையாடினார். அதே திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இயற்கையின் புதையலை அந்தமான் மக்கள் பெற்றிருப்பதாகவும், கலாச்சாரம், பண்பாடு, கலையில் சிறந்து விளங்குவதாகவும் புகழாரம் சூட்டினார்.

சூரிய ஒளி, மின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மோடி குறிப்பிட்டார்.

நாட்டின் எந்த ஒரு மூலையில் உள்ள பகுதியும், மேம்பாட்டை இழந்து விடக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக மோடி தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு வசதிகள் முக்கியம் என கூறியுள்ள பிரதமர் மோடி, மீனவர்கள் நலனுக்காக அண்மையில், 7,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி இருப்பதாகவும், அந்த நிதியின் மூலம் குறைந்த வட்டியில் மீனவர்களுக்கு கடன் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அந்தமான் நிக்கோபர் தீவு மக்களின் வாழ்வை மேம்படுத்த, குறைந்த விலை ரேசன் பொருட்கள், சுத்தமான குடிநீர், கேஸ் இணைப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்டவை எளிதாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து போர்ட் பிளேய்ரில் உள்ள செல்லுலார் சிறையையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். ITI கட்டிடம், நவீன விளையாட்டு அரங்கைத் திறந்து வைத்தார்.

போர்ட் பிளேய்ரின் சவுத் பாய்ன்டில் பிரதமர் மோடி உயரமான கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்தார். மேலும் ராஸ், நீல், ஹேவ் லாக் ஆகிய தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சஹீத் த்வீப், சுவராஜ் த்வீப் என பெயர்களை மாற்றி அறிவித்தார்.

மேலும், அங்குள்ள மக்களின் பிரதான பிரச்சனையாக கடல்அரிப்பைத் தடுக்கும் பொருட்டு தடுப்பு சுவர் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *