இலங்கை மாணவரை சிக்கவைத்தவர் அவுஸ்ரேலிய வீரரின் சகோதரர் மீண்டும் கைது!

அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவுஜாவின் சகோதரர் அர்சலன் கவுஜா சிட்னி பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அர்சலன் கவுஜா இலங்கை மாணவரான நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் திட்டமிட்டு சிக்கவைத்தார் என சந்தேகத்தின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அர்சலன் கவுஜா, பிணை நிபந்தனைகளுக்கு மாறாக எதிர்த்தரப்பு சாட்சியங்களுடன் தொடர்புகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை மாணவர் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்கவைக்க போலி ஆதாரங்கள் புனையப்பட்டு நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக அலுவலகத்தில் தடயங்களாக வைத்துவிட்டதன் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிஸாம்தீன் கைது செய்யப்பட்டு, ஒரு மாதகாலமாக விசாரிக்கப்பட்டு பின்னர், அவருக்கு எதிரான வழக்கு மீளப்பெறப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

அதன்பின்னர், இந்த வழக்கின் பிரதான சூத்திரதாரி என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட அர்சலன் கவுஜா, பூர்வாங்க விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கு 100 மீற்றர் தொலைவெல்லைக்குள் போகக்கூடாது என்பதுடன் 50 ஆயிரம் டொலர் சரீரப்பிணையிலும் மேலும் சில நிபந்தனைகளுடனும் இவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், கடந்த சில வாரங்களாக தனது எதிர்த்தரப்பு சாட்சியங்களோடு தொடர்புகொண்டு பொலிஸார் நடத்திவரும் விசாரணைகளில் செல்வாக்கு செலுத்த முயற்சிசெய்கிறார் என்ற குற்றச்சாட்டில் அவர் மீளவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அர்சலன் கவுஜா-வின் சகோதரர் உஸ்மான் கவுஜா மெல்பேர்னில் நடைபெற்றுவரும் Boxing Day டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *