உங்கள் கையில் இருக்கும் ஏடிஎம் கார்டு இன்று முதல் செயல்படுமா? தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் ஏடிஎம் அல்லது கடன் அட்டை எனப்படும் கிரடிட் கார்ட்டைப் பயன்படுத்துபவராக இருந்தால், அது இன்று முதல் செயல்படுமா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியமாகும்.
அதாவது பழைய ஏடிஎம் அல்லது கிரெடிட் கார்டுகள் 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் செயல்படாது என்று வங்கிகள் ஏற்கனவே அறிவித்து புதிய அட்டைகளை அனுப்பும் பணியைத் தொடங்கி விட்டன.

அதாவது 2015ம் ஆண்டு ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கி நிர்வாகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது. அதில் பழைய மேக்னடிக் ஸ்டிரிப்ஸ் ஏடிஎம் / கிரடிட் அட்டைகள் பாதுகாப்பற்றவை என்பதால் அவற்றை மாற்றிக் கொடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

அதாவது மேக்னடிக் ஸ்டிரிப்ஸ் அட்டைகளை எளிதாக ஸ்கிம்ட் இயந்திரங்கள் மூலம் பயன்படுத்தி குற்றவாளிகள் துஷ்ப்பிரயோகம் செய்ய முடியும் என்பதே அதற்கான காரணம்.
ஆர்பிஐயின் வழிகாட்டுதலின்படி, மேக்னடிக் ஸ்டிரிப்ஸ் அட்டைகளை மாற்றிவிட்டு இஎம்வி எனப்படும் சிப் பொருத்தப்பட்ட ஏடிஎம் / கிரடிட் அட்டைகளை வங்கிகள் வழங்கி வந்தன. அதன் அடிப்படையில் பழைய அட்டைகளுக்கு 2018 டிசம்பர் 31ம் தேதியை கடைசி நாளாகவும் அறிவித்திருந்தது.

எனவே, இன்று முதல் சிப் பொருத்தாத ஏடிஎம்/கிரடிட் அட்டைகள் செயல்படாது. உங்கள் அட்டை செயல்படுமா? என்பதை சோதிக்க வேண்டுமா? உங்கள் ஏடிஎம் / கிரடிட் அட்டையை எடுத்துப் பாருங்கள். அதன் முன்பக்கத்தில் இடது பக்கத்தில் சிம்கார்டு போன்ற ஒரு சிப் பொருத்தப்பட்டிருக்கும். அது போன்ற சிப் இருந்தால் உங்களுடைய ஏடிஎம் / கிரடிட் அட்டை செயல்படும். இல்லையென்றால் அது பழைய மேக்னடிக் ஸ்டிரைப் அட்டை. அது இன்று முதல் செயல்படாது.

உங்கள் கைவசம் ஏடிஎம் / கிரடிட் அட்டை இல்லை என்றால், அதில் சிப் இருக்கிறதா? இல்லையா என்பதை எப்படி உறுதி செய்து கொள்வது? வழி இருக்கிறது. அதாவது 2013ம் ஆண்டுக்குப் பிறகு வங்கிகள் வழங்கிய ஏடிஎம் / கிரடிட் அட்டைகளில் சிப் பொருத்தப்பட்டிருக்கும் என்பதை அடிப்படையாக வைத்தும் உறுதி செய்து கொள்ளலாம். அதற்குப் பிறகு நீங்கள் ஏடிஎம் /கிரடிட் அட்டையை பெற்றிருந்தால் அதில் சிப் இருக்கும்.

ஒரு வேளை உங்களுக்கு புதிய அட்டை வந்து சேரவில்லை? அதற்காக நீங்கள் செலவிட நேருமா? இல்லவே இல்லை. எந்தக் கட்டணமும் இல்லாமல் வங்கிகள் புதிய அட்டையை வழங்கி வருகின்றன. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை நேரடியாகத் தொடர்பு கொண்டு புதிய ஏடிஎம் / கிரடிட் கார்ட் பெறுவது குறித்த விண்ணப்பத்தை வைக்கலாம். இணையவங்கிச் சேவையின் மூலமாகவும் விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்துவிட்டால் உங்களுக்கு புதிய ஏடிஎம் / கிரடிட் அட்டை வழக்கமாக உங்களது பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு வந்து சேர்ந்துவிடும். புதிய ஏடிஎம் அட்டை வந்ததும், உடனடியாக அதற்கு புதிய பின் எண்ணை மாற்றி விடுங்கள். பழைய பின் எண்ணையே பயன்படுத்த வேண்டாம்.

உங்கள் பழைய அட்டையை வைத்து என்னதான் செய்ய முடியும்? என்று கேட்கிறீர்களா? ஒன்றும் செய்ய முடியாது. இணையவங்கிச் சேவை மூலமாக மட்டுமே உங்கள் வங்கிப் பணிகளை மேற்கொள்ளலாம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *