ஜனாதிபதி படுகொலை சதியில் மாகந்துர மதுஷிற்கும் தொடர்பா? – நீதிமன்றில் CID-யின் தகவலால் பரபரப்பு!
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, மாகந்துர மதுஷ் மற்றும் பாடகர் அமல் பெரேராவிற்கு இடையில் தொடர்பு உள்ளதா என விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக குற்றவியல் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணையானது இன்று (புதன்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் இந்த விசாரணைகளின் போது, அமல் பெரேரா மற்றும் மாகந்துர மதுஷ் தற்போது டுபாய் பொலிஸால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 21இல் பாடகர் அமல் பெரேரா, நாலக டி சில்வாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தார் என்று சி.ஐ.டி. நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அந்தவகையில் குறித்த விடயம் தொடர்பாக விசாரணைகளை நடத்த இன்டர்போல் உதவியை நாடவுள்ளதாகவும் குற்றவியல் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
மேலும் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் இந்திய பிரஜை எம்.தோமஸ் ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.